Saturday, March 17, 2012

விளையாட்டுப் போட்டி 2012 நிகழ்வுகளும் புகைப்படங்களும்


எமது பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் சென்ற மாதம் 10.02.2012 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

பாடசாலை பாண்ட் வாத்தியக் குழுவினர் நிகழ்வுக்குத் தயாராவதைக் கீழே காணலாம்.



விழாவிற்கு பருத்தித்துறை கல்வி வலயத்தின் பிரதிக் கல்வி அபிவிருத்திப் (நிர்வாகம்) பணிப்பாளர் திருமதி ரஞ்சிதமலர் குட்டித்தம்பி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேடையில்  அதிபர் திரு.பொ.பொன்னம்பலம், பிரதம அதிதி மற்றும் விசேட அதிதிகள் விற்றிருப்பதைக் காணலாம்.


மெதடிஸ்ட் பெண்கள் கல்லூரி அதிபர், முன்னை நாள் அதிபர் திரு.மு.கனகலிங்கம், உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சு.சற்குணராஜா  ஆகியோரையும்  மேடையில் இனங்காண முடிகிறது.


இடைநேர நிகழ்ச்சியாக மாணவர்களின் நடனம் நடைபெற்றது. பாடலுக்கான நடனம் போலவும், உடல் பயிற்சியின் அங்கமாகவும் வண்ண வண்ண உடையணிந்த செல்லக் குழந்தைகள் நிகழ்வு பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.


பிரதம அதிதி திருமதி ரஞ்சிதமலர் குட்டித்தம்பி குத்து விளக்கு ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைக்கிறார்.


புதிதாக வர்ணம் பூசப்பட்டவிளையாட்டு அரங்கும் பின்னணியில் பளிச்சிட்டு நிற்கிறது.


நிகழ்வில் வெற்றி ஈட்டிய மாணவனுக்கு பிரதம அதிதி வெற்றிக் கேடயத்தைப் பரிசாக அளிக்கிறார்.



வெற்றி பெற்ற ஏனைய விளையாட்டு வீரர்களும் பரிசுகளைப் பெற்றனர்.

0.0.0.0.0

Post Comment

Friday, March 9, 2012

1969ம் ஆண்டு வெளியான பாடசாலை ஆண்டு மலரில் இருந்து..

எமது பாடசாலை ஸ்தாபிக்கப்பட்டது 1875 ம் ஆண்டு ஆகும். சரியாகச் சொல்வதானால் 1875ம் ஆண்டு புரட்டாதி மாதம் 5ம் திகதி ஆகும். 94 ஆண்டு நிறைவைக் குறிக்குமுகமாக அந்நேரத்தில் ஆண்டு மலர் ஒன்று வெளியிடப்பட்டது.


அதிலிருந்து  சில விடயங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

அன்றிருந்த எமது பாடசாலையின் முகப்புத் தோற்றம் இது.


இந்த மலரானது எமது பாடசாலையை ஸ்தாபித்த திரு.ஆ.ஆ.சிதம்பரப்பிள்ளை அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.


அன்று அதிபராக இருந்தவர் எம் எல்லோரது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிதாயிருந்த திரு.மா.சுப்பிரமணியம் அவர்களாகும். அதிபரான அவரை அந்நேரத்தில் நாம் யாவரும் சுப்பிரமணிய வாத்தியார் எனவும், தலைமை உபாத்தியாயர் எனவுமே அன்புடன் அழைப்பதுண்டு.


பாடசாலையில் அக்கறை மிகக் கொண்டவரான அவரை .." மனதுக்கண் மாசிலனாய், மெய்வருத்தம் கூலி தரும் என்ற நம்பிக்கையுடன் தொண்டாற்றும் வித்தியாலயத் தலைமை ஆசிரியன்" என பெருமையுடன் போற்றியது மலர்.

பாடசாலையின் வளர்ச்சி பற்றி திரு.வ.சபாபதிப்பிள்ளை ஆசிரியர் தகவல்கள் நிறைந்த கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.


0.0.0

0.0.0


0.0.0


0.0.0

0.0.0

0.0.0
பாடசாலைக்கான இரண்டாவது மண்டபம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றதும் அந்தக் காலகட்டத்திலேயே எனத் தெரிகிறது. அப்பொழுது இவற்றை நிறைவேற்றி வைத்த பெற்றோர் ஆசிரிய சங்க உறுப்பினர்கள் பற்றிய விபரமும் மலரில் தரப்பட்டிருந்தது.



0.0.0

அக் காலகட்டத்தில் பாடசாலையில் கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியர்கள் விபரம் வருமாறு..

மேலும் பல சுவார்ஸமான தகவல்கள் இம்மலரில் அடங்கியுள்ளன. அவை பற்றி மற்றொரு பதிவில் தருகிறோம்.

0.0.0

Post Comment

Tuesday, March 6, 2012

பாடசாலை வளர்ச்சியில் அபிவிருத்திச் சங்கங்களினதும் பழைய மாணவர் சங்கங்களினதும் பங்களிப்பு

எந்தவொரு  பாடசாலையின் வளர்ச்சியில்,அபிவிருத்திச் சங்கங்களினதும் பழைய மாணவர் சங்கங்களினதும் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி எமது பாடசாலை பழைய மாணவரான கணக்காளர் திரு இராஜ்.சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய கட்டுரை இது.


பாடசாலை வளர்ச்சியில் அபிவிருத்திச் சங்கங்களினதும் பழைய மாணவர் சங்கங்களினதும் பங்கு

இராஜ்.சுப்பிரமணியம்
FCMA FIM,DPFM

(பிரதம பணிப்பாளர் இலங்கை முகாமை அபிவிருத்தி நிலையம்).

எந்தவொரு சமூக அமைப்பிலும் பாடசாலை ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது. பாடசாலையின் வளர்ச்சியும், தளர்ச்சியும் சமூகத்தில் முறையே எழுச்சியையும் தாழ்வையும் ஏற்படுத்துகின்றது. அதேபோல் சமூகத்தில்; ஏற்படுகின்ற முன்னேற்றம் அல்லது தாழ்வு பாடசாலையிலும் பிரதிபலிப்பதை காணக்கூடியதாக இருக்கும்.

அச்சாணிகள்

பாடசாலைகள் தம் குறிக்கோள்களை, நோக்கங்களை செவ்வனே நிறைவேற்ற வேண்டுமாயின் அது சார்ந்த சமூகத்தின் ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெற்றிருத்தல் அவசியம்.

இதற்கு அச்சாணியாக இருப்பவர்கள் பாடசாலையின் அதிபரும் ஆசிரியர்களுமாவர். அவ்வாறு அமையாவிடத்து பாடசாலையில் இருந்து சமூகம் பெறக் கூடிய நன்மைகளும் சமூகம் பாடசாலைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளும்  நிறைவாக கிடைக்கும் என எதிர்பாக்க முடியாது. பாடசாலையின் முன்னேற்றத்தில் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் சிரத்தையுடன் ஈடுபட்டு அதன் வளர்ச்சியில் அதிபரும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் ஒருங்கிணைந்து செயற்படுகின்ற பொழுது பாடசாலை நல்ல முன்னேற்றப் பாதையில் செல்வது மாத்திரமன்றி சமூகமும் நல்ல பெறுபேறுகளை அறுவடை செய்ய முடியும்.

பாடசாலை அபிவிருத்திச்சங்கம் (முன்பு பெற்றோர் ஆசிரியர் சங்கம் என்ற பெயரிலும்) பழைய மாணவர் சங்கம் போன்ற அமைப்புகள் பல ஆண்டுகளாக பாடசாலைகளில் இயங்கி வந்திருப்பினும் அண்மைக்காலத்திலேதான் அவைகளின் நன்மைகள் உணரப்பட்டு பாடசாலைகளில் அதிக அளவில் செயற்பட்டு வருகின்றன.

சிறிய பாடசாலைகளிலும்

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெரிய முன்னணிக் கல்லூரிகளிலும் மகாவித்தியாலயங்களிலும் இவ் அமைப்புகள் இயங்கி வந்திருப்பினும் அண்மைக்காலமாக அவை சாதாரண, ஆரம்பப் பாடசாலைகளிலும் வேருன்றி செயல்படுகின்றமையை காணக் கூடியதாக இருக்கிறது. சில பாடசாலைகளைப் பொறுத்த மட்டில் வெளிநாடுகளில் கூட பழைய மாணவர் சங்கங்கள் திறமையுடன் செயற்பட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.



அங்கீகாரம்

கல்வி அமைச்சினாலும் கல்விப் பகுதியினராலும்  பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களுக்கும் பழையமாணவர் சங்கங்களுக்கும் வழங்கப்படுகின்ற அங்கீகாரமும் முதன்மையும் இவ்வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைகிறது.

பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் பழைய மாணவர் சங்கங்கள் பெயரளவிலேயே மாத்திரம் இயங்குகின்ற நிலைமை மாறிவிட்டது. அவ் அமைப்புகளினது ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் ஆக்க பூர்வமான முயற்சிகளுக்கு கல்விப் பகுதியினர் ஊக்குவிப்பதனால் இவ்வமைப்புகள் புத்துயிர் பெற்று ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. கிராமப்புற பாடசாலைகளைப் பொறுத்த மட்டில் இவ்வமைப்புகளின் ஈடுபாடுகளும் செயற்பாடுகளும் குறைவாகத் தான் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் பெற்றோர்களையும் இணைத்து பாடசாலை நிர்வாகம் இச்சங்கங்களை செவ்வனே இயங்கச் செய்ய முடியும்.

பாடசாலைகளின் பங்குதாரிகள்

பாடசாலைகளை வெறும் அரசாங்க நிறுவனங்கள் என்ற மனக்கோட்பாட்டோடு நோக்கிய பல பெற்றோர்களினதும் பழைய மாணவர்களினதும் சிந்தனைகள் இப்போது மாற்றமடைந்துள்ளது.  பாடசாலைகளில் தாமும் ஓரு பங்குதாரர்கள் என்ற உணர்வு மேலோங்கி வருகிறது. பாடசாலைகளாவன சமூகத்தினால் பேணப்படவேண்டிய நிறுவனங்கள் என்ற வகையில் தமது பங்களிப்பை மனமுவந்து செய்யும் நிலைமை ஒரு நல்ல சகுனம் என்றே கொள்ள வேண்டும்.

பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்களும் வழங்கும் ஆலோசனைகளுக்கு கல்விப் பகுதியினரும் முக்கியத்துவம் அளித்து வருகின்ற சூழலில் அவ்வமைப்புகள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றன. பல பாடசாலைகளில் இவ்வமைப்புகள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட்டு புத்துயிரோடும் புத்துணர்வோடும் செயற்பட்டு வருகின்ற நிலைமையை காணக்கூடியதாக இருக்கின்றது.

அதே வேளையில், இவ்வமைப்புகளின் செயற்பாடுகள் கிராமப்புற கனிஷ்ட பாடசாலைகளில் பல முன்னேற்றங்களை வேண்டி நிற்கின்றன.

பாடசாலை வளர்ச்சியில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பங்கு பலவாறு அமையலாம். பலதுறைகளிலும் பலவகைகளிலும் பலகோணங்களிலும் அவை தொண்டாற்றிச் சேவை செய்யமுடியும். பெற்றோர்களின் ஆர்வத்தை நல்ல முறையில் பயன்படுத்திப் பாடசாலையின் வளர்ச்சியில் அதனைத் திசை திருப்பி வெற்றி காண்பதில் பாடசாலை அதிபரின் பங்கு மிகவும் பிரதானமானது.

முரண்களைத் தவிர்த்தல்


பெற்றார் ஆசிரியர் சங்கங்கள் தமது கடமைகளைச் செய்ய முற்படுகின்றபோது தமது எல்லைக் கோட்டைக் கடந்து பாடசாலை  உள்நிர்வாகத்தில் தலைமையிடாமல் இருப்பது மிகவும் விரும்பத்தக்கது. உள்நிர்வாகம் எங்கு தொடங்குகிறது எங்கு முடிகிறது என அடையாளம் கண்டுகொள்வது பாடசாலை அமைப்பிலே சில வேளைகளில் ஒரு சிரமமான காரியமாகும். இருந்தபோதும்; பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள்;, பழைய மாணவர் சங்கங்கள் தமது அமைப்புக்கு இடப்பட்ட வரம்பைமீறி செயற்பட ஆரம்பிக்கும் போது அதிபரின் ஆளுமைக்கும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புக்கும் விரும்பத்தகாத தாக்கத்தை ஏதோ ஒரு வகையில் ஏற்படுத்துகிறது.

பாடசாலை நிர்வாகத்துடன் சுமுகமான உறவைப் பேணும் அதேவேளையில் பழைய மாணவர் அடைப்புகளும், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் தத்தமது செயற்பாடுகளின் போது தமக்கிடையே முரண்பாடுகள் எழாமல் சுமுகமாகவும், புரிந்துணர்வுடனும் செயற்படுவது அவசியம். பெயர், புகழ், விளம்பரம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாது பாடசாலை அபிவிருத்திப் பணியில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயங்களை முதலில் அணுகித் தீர்ப்பது நல்லதாகும்.

முக்கிய தேவைகளுக்கு முன்னுரிமை

இந்நாட்டின் கல்வி விருத்திக்காக அரசினால் செலவிடப்படும் பணத்தின் தொகை வருடாவருடம் அதிகரித்து வருகிறது. ஆனால் பாடசாலைகளின் முழுத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு எமது நாட்டின் நிதிவளம் நிறைவானதல்ல. இந்நிலையில் பாடசாலைகளின் தேவைகளை ஆராய்ந்து, குறைகளைத் தீர்;ப்பதற்கு பாடசாலை அபிவிருத்த்திச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் முன்வரவேண்டும். அக் குறைகள் தீர்க்கப்படாதவிடத்து அதனால் பாதிக்கப்படப் போவது தம் பிள்ளைகளே என்பதை மறந்துவிடலாகாது.                    

கல்விக்கு முன்னுரிமை

பாடசாலைகளின் வகுப்பறைகள்,  விஞ்ஞானகூடங்கள், தொழிற்கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றை சீரமைத்துக் அமைத்துக் கொடுப்பது மாத்திரம் இவ் அமைப்புகளின் கடமை அல்ல. பாடசாலைப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியிலும் இவ் அமைப்புகள் ஆர்வங் கொள்ள வேண்டும் இதற்காக பாடசாலை நிர்வாகத்துடன் நேரடித் தொடர்பு கொண்டு செயலாற்றுவது விரும்பத்தக்கது.

ஓவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளையின் கல்வி வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை வீட்டில் ஏற்படுத்திக் கொடுப்பது முதற் படியாகும், பாடசாலைக் கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் அமைவாகத் தமது பிள்ளைகள் கருமமாற்றும் வகையில் ஒத்துழைப்பை நல்கவேண்டும்.

தமது பிள்ளையோடு மட்டும் நின்றுவிடாது பெற்றோர்கள் பாடசாலையின் முழுமையான கல்வி வளர்ச்சியில் ஆர்வங்காட்ட வேண்டும். அதற்கேற்ற கூட்டு முயற்சிகளாக ஆற்றக்கூடிய பணி;களில் கவனத்தைச் செலுத்துவது நன்று. பிள்ளைகளின் பெறுபேறுகள்,அவர்களின் முன்னேற்றங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதை ஆராய்ந்து பார்த்து, அவர்களின் பொதுவான குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வழிவகைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

பிள்ளைகளிடையே வெளித் தெரியாதிருக்கும் திறமைகளையும், ஆற்றல்களையும் சாதுரியங்களையும் வெளிக்கொணர்வதற்குத் தேவையான பின்புல நடவடிக்கைகளை ஆரம்பித்தல் நன்று. இவை பற்றித்  தனித்தும், கூட்டாகவும், அதிபர் ஆசிரியர்களின் அனுசரனையுடனும் சிந்தித்து, கலந்தாலேசித்து செயலாற்றுகின்ற நிலைமையை உருவாக்க வேண்டும்.

மெல்லக் கற்போர்

கல்வியில் பின் தங்கியிருக்கும் மாணவர்களில் மேலதிக அக்கறை எடுப்பது அவசியம். மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற விதத்தில் உகந்த ஆசிரியர்கள் ஊடாக மேலதிக வகுப்புகளை தனியாக நடாத்தி அவர்களையும் ஏனைய மாணவர்களுடன் கல்வி நீரோட்டத்தில் இணைக்க முயல வேண்டும். அவர்கள் திறமைச் சித்தி பெறாவிட்டாலும் கூட அடிப்படைக் கல்வியைப் பெற்று பயனுள்ள பிரசைகளாக எதிர்காலத்தில் வாழ இத்தகைய வகுப்புகள் உதவும்.

தாம் கல்வியில் பின்தங்கியவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மைக்கும் மனஉழைச்சலுக்கும் மெல்லக் கற்கும் மாணவர்கள் ஆளாகாத வண்ணம் அத்தகைய திட்டத்தை முன்னெடுப்பது மிக முக்கியமாகும்.

பணம் மட்டும் உதவியும் பங்களிப்பும் ஆகாது

பெற்றோரிடமிருந்து பண உதவி தேவைப்படும் போது மாத்திரம் சங்கங்களை கூட்டாது பெற்றோர் ஆசிரிய சங்கங்கள் பழைய மாணவர் சங்கங்களை அடிக்கடி கூட்டி பாடசாலையின் நிறைகுறைகளை தெரிவித்து விவாதிக்க வேண்டும். அவர்களை பாடசாலையின் வளர்ச்சில் ஈடுபடுத்த வேண்டும். ஆண்டுக்கொரு முறை பகட்டான பெரிய விழாக்களை மாத்திரம் எடுப்பதோடு நின்றுவிடாது தமது முயற்சிகளை பல துறைகளிலும் பலவகைகளிலும்  பயன்படுத்த வேண்டும்.

பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் பழைய மாணவர் சங்கங்கள் ஆகியவற்றினால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகக்குழு தம்மிடம் சுமத்தப்பட்ட பொறுப்பை தட்டிக்கழியாது பெற்றோர்கள், பழைய மாணவர்கள் வைத்த விசுவாசம் வீண்போகாதவாறு பாடசாலையின் நலனையே குறிக்கோளாகக் கொண்டு செயலாற்ற வேண்டும்.

தனிப்பட்ட வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தக் கூடாது

அதே வேளை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திலும் பழைய மாணவர் அமைப்பிலும்   உள்ள பெற்றோர்கள் பழைய மாணவர்கள் தம்மிடையே உள்ள வேறுபாடுகளை, மனக்குறைகளை அமைப்புகளின் செயற்பாடுகளிலே காண்பிக்காது திறந்த மனதுடன் பரந்த மனோபாவம் கொண்டவர்களாக தமது பங்களிப்பை செய்ய வேண்டும். எந்தவொரு செயற்பாடும் தனிப்பட்ட காரணங்களுக்காக சிதைந்து போகாது பொது நன்மையை இலக்காக் கொள்ள வேண்டும்.

கல்விகற்கும் தமது பிள்ளைகளின் பெறுபேறுகளிலும் மற்றும் புறக்கிருத்திய வேலைகளிலும் பாடசாலை மட்டத்திலும் மாவட்ட தேசிய மட்டத்திலும் தமது பிள்ளைகள் பொதுவாக நல்ல தரத்தினை அடைந்துள்ளார்கள் என்ற நிலைமை பெற்றோர்களினதும் பழைய மாணவர்களினதும் மனதில் ஏற்படுகின்ற பொழுது அது ஒரு காந்த சக்தியாக ஏனைய பெற்றோர்களும் பழைய மாணவர்களும் தமது பங்களிப்பை மனமுவந்து கூடுதலாக செய்ய ஊக்குவிக்கும். இத்தகைய சிறந்த செயற்பாடுகளால் அதிபரினதும் ஆசிரியர்களினதும் பாரம் இலகுவாக்கப்படுகின்றது.

நிதி நிர்வாகம் வெளிப்படையாக அமைய வேண்டும்

பெற்றோர்கள், பழையமாணவர்கள் உவந்தளிக்கும் நன்கொடைகள் யாவும் பாடசாலையின் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன என்று, திருப்திப்படும் வகையில் பாடசாலை நிதி நிர்வாகம் அமையவேண்டும். பெறN;றார்களினாலும், பழைய மாணவர்களினாலும்  மனமுவந்து அளிக்கப்படுகின்ற நன்கொடைகளுக்குப் பற்றுச்சீட்டுக்கள் உடனடியாக வழங்கப்பட்டு, உரிய முறையில் அவைகள் கணக்கு வைக்கப்படுவது அவசியமாகும்.

அவை பாடசாலையின் அத்தியாவசிய தேவைகளுக்கே பயன்படுத்தல் வேண்டும். இன்றேல் தாம் கொடுக்கின்ற நிதி ஆடம்பரமான காரியங்களுக்காக விரயம் செய்யப்படுகின்றது அன்றேல் மோசடி செய்யப்படுகின்றது என்ற சந்தேகம் அபிப்பிராயம் நன்கொடையாளர் மனதில் தோன்றுவது தவிர்க்க முடியாதது. அதனால் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் தொடர்ந்;;தும் ஆதரவு தருவதில் தயக்கம் காட்டுவார்கள். நிதி நிர்வாகம் செவ்வனே நடைபெறுகின்றது என்பது பற்றிக் கண்காணிக்கின்ற பொறுப்பு அதிபரைச் சார்ந்ததாகையால் இது விடயத்தில் பாடசாலை அதிபர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

நிதி நிர்வாகம் சீராக இல்லாதவிடத்து பெற்றோர்களின் நம்பிக்கையை பாடசாலை இழக்கின்ற ஒரு பரிதாபநிலை ஏற்படுவதோடு பாடசாலை அமைப்பு சீர்குலைந்து அதன் வளர்ச்சியும் அதன் பலனாக கிட்டும் சமூக முன்னேற்றமும் தடைப்படுகின்ற ஓர் இடர்ப்பாடான நிலையும் உருவாகலாம். ஆகவே இவைகளையெல்லாம் கவனத்திற் கொண்டு பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் ஆகியனவற்றை நல்ல முறையில் வளர்த்து அதன் ஆக்க சக்திகளை பாடசாலையின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்துவதிலேயே இவ்வமைப்புக்களின் வெற்றி தங்கியுள்ளது.
0.0.0.0.0.0


Post Comment

Monday, February 27, 2012

2012 ஆண்டிற்கான செயற்குழு விபரம்

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தினரின் 2012 ம் ஆண்டிற்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் 12.02.2012 ல் நடைபெற்றபோது தெரிவு செய்யப்பட்ட செயற்குழு உறுப்பினர் விபரம் வருமாறு

செயற்குழு அங்கத்தவர்கள்

போஷகர்:                             திரு.ஆ.சி. வாசுதேவன்

தலைவர்:                             டாக்டர். எம்.கே. இரகுநாதன்

சிரேஷ்ட உப தலைவர்:  டாக்டர் எம்.கே. முருகானந்தன்

உப தலைவர்கள்:              டாக்டர்.சி. மகாலிங்கம்
                                                டாக்டர்.ஜீ. கேதீஸ்வரநாதன்
                                                திரு.மு. சோமசுந்தரம்
                                                திரு.இ. இரவீந்திரன்

இணைச் செயலாளர்கள்:   திரு.க .பிரபாகரன்
                                                    திரு.சி.க. சண்முகசுந்தரம்

பொருளாளர்:               திருமதி வள்ளி பிரபாகர்

உப பொருளாளர்:       திரு.சி. இரத்தினசிங்கம்

கணக்காய்வாளர்:      திரு.சி. தயாலிங்கம்

செயற்குழு அங்கத்தவர்கள்:
                                       திரு.க. கலாகரன்
                                       திரு. க. சிதம்பரநாதன்
                                       செல்வி விக்னா செல்வநாயகம்
                                       திருமதி மணிமாதேவி முருகானந்தன்
                                       திரு.க. சிவப்பிரகாசம்
                                       திருமதி யோகேஸ்வரி சண்முகசுந்தரம்
                                       திரு.சி. வர்ணகுலசிங்கம்
                                       திரு.சு. ஜீவகுமார்
                                       திரு.க. சச்சிதானந்தம்
                                       திரு.ஆ. சிவநாதன்
                                       திரு.கே.ரீ. பாலேந்திரன்

ஆலோசனைக் குழு

பிரதம ஆலோசகர்:      திரு.ராஜ் சுப்பிரமணியம்

ஆலோசனைக் குழு அங்கத்தவர்கள்:
                           
                             திரு. எஸ். சற்குணராசா
                             திரு.உ. வரதராஜன்                       
                             திரு.சி.வசந்தன் (Kandy)
                             திரு.தி. செல்வமோகன் (Kandy)
                             திரு.இ. கிருஷ்ணராசா (Denmark)
                             திரு.நி.சிவரூபன் (USA)
                             திரு.க. முருகவேல் (Aust)                             
                             திரு.சி. முகுந்தன் (USA)
                             திரு.க. சிறீஸ்கந்தராஜன்.
                             திருமதி.தேவாம்பிகை காசிவிஸ்வநாதன்         
                                                  
  
எல்லோரது ஆலோசனைகள் பங்களிப்பு ஆகியவற்றை முழுமையாகப் பெற்று புதிய திட்டங்களைத் தீட்டவும், செயற் திட்டங்களை மேலும் சிறப்பாக முன்னெடுப்பதற்கும் ஏதுவாக ஆலோசனைக் குழு அங்கத்தவர்களையும், செயற்குழு அங்கத்தவர்களையும் உள்ளடக்கியதாக  மூன்று குழுக்களை அமைக்க வருடாந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

அவற்றின் விபரம் வருமாறு


1. கல்வி மேம்பாட்டுக் குழு

திரு.க. பிரபாகரன்
திரு.சி. வர்ணகுலசிங்கம்
திரு.க. கலாகரன்
திரு. எஸ். சற்குணராசா
திரு.உ. வரதராஜன்
திரு.சு. ஜீவகுமார்
செல்வி விக்னா செல்வநாயகம்

2. நிதியீட்டல்

  திருமதி வள்ளி பிரபாகர்
  திரு.ஆ. சிறீநாதன்
  திரு.சி.வசந்தன் (Kandy)
  திரு.தி. செல்வமோகன் (Kandy)
  திரு.இ. கிருஷ்ணராசா (Denmark)
  திரு.நி.சிவரூபன் (USA)
  திரு.க. முருகவேல் (Aust)  
  திரு.சி. முகுந்தன் (USA)
  திரு.க. சிறீஸ்கந்தராஜன்.
  திரு.ஆ. சிவநாதன்


3. கலை, கலாசார, விளையாட்டு ஏனைய நிகழ்வுகள்
   டாக்டர் எம்.கே. முருகானந்தன்    
   திரு.ராஜ் சுப்பிரமணியம்
   டாக்டர் எம்.கே. இரகுநாதன்
   டாக்டர் ஜீ. கேதீஸ்வரநாதன் 
  திரு.இ. இரவீந்திரன்
  திரு.சி.க. சண்முகசுந்தரம்
  திருமதி மணிமாதேவி முருகானந்தன்   
 
0.0.0.0.0.0.0.0
                      
               
                                             
                            
                          
                   

Post Comment

Sunday, February 26, 2012

நிர்வாக குழுக் கூட்டம் அறிவித்தல்

எமது மேலைப் புலோலி சைவப்பிரகாச பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியத்தின் நிர்வாக குழுக் கூட்டம் எதிர் வரும் 07.03.2012 புதன்கிழமை (போயா தினம்) மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது.

வழமைபோல இக் கூட்டம் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில், ஒன்றியத் தலைவர் டொக்டர்.எம்.கே.இரகுநாதன் தலைமையில் நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல்
  1. சென்ற கூட்ட அறிக்கை
  2. வருடாந்தப் பொதுக் கூட்ட அறிக்கை
  3. வருடாந்தப் பொதுக் கூட்டநிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல்
  4. பாடசாலை அபிவிருத்திக்கான எதிர்காலத் திட்டங்கள்
  5. ஏனைய விடயங்கள்
இந்த வருடத்திற்கான முதற் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

செயற்குழு அங்கத்தவர்களையும் ஆலோசானைக் குழு அங்கத்தவர்களையும் தவறாது சமூகம் அளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

0.0.0.0.0.0.0.0

Post Comment

Tuesday, February 21, 2012

அதிபர் மு.கனகலிங்கம் அவர்களை கெளரவித்து உரை

முன்னாள் அதிபரும் இந்நாள் மணற்காடு ரோ.க. பாடசாலை அதிபருமான திரு.மு.கனகலிங்கம் அவர்களுகான கெளரவிப்பு இவ்வருடப் பொதுக் கூட்டத்தின் விசேட அம்சமாக இருந்தது. அதிபர் திரு.மு.கனகலிங்கம் அவர்களுக்குஎமது ஒன்றியத் தலைவர் டொக்டர்.எம்.கே.இரகுநாதன் மாலை அணிவித்துக் கெளரவித்தார்.


திரு.கனகலிங்கம் அவர்கள் எமது பாடசாலைக்கு அளித்த சேவைகளைக்கு நன்றி கூறியும், அவரது கல்வித் தகமை, நிர்வாகத் திறமை, பண்பான குணம் போன்ற நினைவு கூர்ந்தும் டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அந்நிகழ்வில் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு.



"திரு.மு.கனகலிங்கம் அவர்கள் எமது பாடசாலைக்கு கிடைத்த அதிபர்களுள் மிகப் பெரிய கல்விமான். MA பட்டம் பெற்றவர். பட்டப் பின்படிப்பாக M Phil (Edu) ) பெற்றவர்.

அத்துடன் யாழ் பல்கலைக் கழக வருகை விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். ஆசிரியர்களுக்கான கல்வித் திணைக்கள உள்ளக பயிற்சிகளில் பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றுகிறார்.

அறிவாற்றல் மிக்கவர். கல்வி கற்பித்தலில் தேர்ச்சிமிக்கவர் மட்டுமின்றி பல்துறை ஆர்வவும் திறமைகளும் கொண்டவர். நவீனத்துவங்களைக் கண்டு அஞ்சி ஓடாது அவற்றை சமூக முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துபவர். கணனி மற்றும் இணையத் தொடர்பாடல் அறிவு பெற்றவர். தான் பெற்ற அத்தகைய திறமைகளைப் பாடசாலை மேம்பாட்டிற்காக பயன்படுத்தி எமது பாடசாலையை கணனித் திறமை கொண்ட பாடசாலை எனப் பாராட்டும் பரிசுகளும் பெற வைத்திருக்கிறார்.

நான் பருத்தித்துறையில் பணியாற்றிய காலத்தில் சமூக, இலக்கிய அறிவுத்துறைகளில் எமது அறிவை இற்றைப்படுத்துவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டு 5 வருடங்களுக்கு மேலாக செயற்பட்ட பருத்தித்துறை அறிவோர் கூடல் நிகழ்வுகளில் எங்களுடன் கலந்து கொண்ட ஒரு இனிய நண்பருமாவார்.

மானிட நேயமும், சமூக மேம்பாட்டையும் இலக்காக் கொண்டவர். அத்துடன் சிறந்த பண்புகள் நிறைந்தவர்.

மற்றவர்களுடன் நயமாக உரையாடும் பாங்கு, அனைவரையும் அரைவணைத்துச் செல்லும் பண்பு, பிரச்சனை கொடுக்கக் கூடியவர்களையும் தனது மதியுக்தியாலும், இனிய சொற்களாலும் கவர்ந்து தன் பக்கம் இழுக்கும் ஆற்றல் போன்ற பல தொடர்பாடல் ஆற்றல் கொண்டவர்.

  • மாணவர்கள்
  • ஆசிரியர்கள்
  • பாடசாலை சமூகம்
  • கல்வித் திணைக்களம்.
என அனைத்தையும் அணைத்து, அவர்களின் ஆதரவுகளைப் பெற்று  பாடசாலையை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லத் தலைமை ஏற்றவராவார்.

இவர் எமது பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் பல வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.

  • புலமைமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்தியவர்களுக்கு- வருடாந்தம் நினைவுப் பரிசுகள் வழங்குவதற்காக பலரிடம் வைப்பு நிதிகள் இடச் செய்தமை
  • பாடசாலைக்கா பெரிய கதவு, பெயர் வளைவு
  • சுவர்களுக்கு வர்ணமடித்து அழகாக்கல்
  • நூலகத்திற்கான புதிய கட்டடம் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆதரவில் அமைத்தமை.
  • அதற்கான பல வகைப்பட்ட நூல்கள் திரட்டியமை
  • புதிய தளபாடங்கள் பெற்றுக் கொடுத்தமை
  • விளையாட்டு உபகரணங்கள் பெற்றுக் கொடுத்தமை
  • உணவு வழங்கல். பாடசாலை சமூகத்தினரின் ஆதரவுடன் மாணவர்களுக்கான உணவுத் வழங்கலை போஷாக்குடையதாக கொடுத்தமை
  • மாணவர்கள் பற்றிய தரவுகளை புகைப்படங்களுடன் கணனி மயப்படுத்தியமை.
  • ஆவணப்படுத்தலில் கணனியைப் பயன்படுத்தியமை
  • மாணவர்கள் கற்பதற்காக கணனி அறையை வேண்டிய தளபாடங்களுடன் ஏற்படுத்தியமை
  • தரைக்கு மாபிள் பதித்தல்
  • சரஸ்வதி சிலைகள்
  • கிணறு மூடி அடைத்தல்

இவ்வாறு இன்னும் பல சொல்லலாம்.

இவர் ஒரு பூரணமான மனிதன். இனிய சிறிய நல்ல குடும்பம், கல்வி முன்னேற்முள்ள குடும்பம், மனைவி ஒரு ஆசிரியை, மகள் பல்கலைக் கழக மாணவி, மகன் உயர்கல்வி மாணவன் என நிறைவான குடும்பம்.

சென்ற வருடம் அவருக்கான பிரியாவிடைக் கூட்டம் எமது பாடசாலையில் ஏற்பாடு செய்திருந்தது. நான் கொழும்பிலிருந்து சென்று அதில் கலந்துகொண்டேன். அதற்குக் காரணம் என்னையும் பாடசாலைப் பணிகள் இடுபாடத் தூண்டியது அவர்தான். அவர் படாசாலைக்கு அதிபராக வந்த ஆரம்ப காலத்தில் நானும் சமாதான காலத்தை முன்னிட்டு பருத்தித்துறையில் வைத்தியப்பணி செய்து கொண்டிருந்தேன். உடனடியாக என்னைச் சந்தித்து பேசி பாடசாலைக்கு அழைத்து பாடசாலை அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்து கொள்ள வைத்தார். இதன் மூலம் பாடசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் என்னை ஈடுபடச் செய்தார்.

நான் கொழும்பு செல்ல வேண்டிய நிலை வந்ததும் அங்கே பழைய மாணவர் ஒன்றியத்தை ஆரம்பித்து நடாத்த முழு ஆதரவு தந்தார்.

எந்த மனிதனும் தனது பதவி செல்வாக்கு முதலியவற்றால் மட்டும் சமூகத்தில் மதிப்புப் பெறுவதில்லை. அவரது தனிப்பட்ட ஆளுமை முக்கியமானது. மற்றவர்களுடனான தொடர்பாடலுக்கு மட்டுமின்றி தனது உள ஆரோக்கியத்திற்கும் கூட அவசியமானதே. தனது இலட்சியங்களை நோக்கிய பயணத்திற்கும் அவசியமானது. இவை அவரிடம் நிறைந்து காணப்படுகின்றன.

உண்மையான தலைமைத்துவம் என்பது தனது முன்னேற்திற்கானது அல்ல. தன்னோடு கூட இருக்கும் அனைவரையும் உயர்த்துவதற்;கும் செயற்பட வைப்பதாக இருக்க வேண்டும். கனகலிங்ம் சேர் எங்களை அவ்வாறே செயற்பட வைத்தார்.

தனக்கு இடப்பட வழமையான கடமைகளைச் செய்வது மட்டுமின்றி புதிய தரிசனங்களுடன் எங்களையும் இணைத்து முன்னேற்றப் பாதையில் வழிநடாத்தினார், சவால்களை கண்டு சலித்து ஒதுங்குபவர் அல்ல. அவற்றை உறுதியோடு எதிர்கொண்டு முன்னேறுவது அவருக்கு கைவந்த கலையாகும். பல இடர்பாடுகளை பாடசாலை நிர்வாகத்தில் எதிர்கொண்ட போதும் அவற்றை எதிர்கொண்டு உற்சாகத்தோடு முன் நகர்ந்தவராவார்.

பல தேவைகளும் பணிகளும் அவசியமாக இருந்தபோதும் அவற்றுள் முன்னுரிமைகளை இனங்கணடு அவற்றிக்கு அழுத்தமும் முக்கியத்துவமும் அளிப்பது இவரது மற்றொரு சிறந்த பண்பு.

முன்னுக்கு நின்று தலைமைத்துவம் கொடுத்தபோதும் தான் மாத்திரம் முன்றோது கூட தளத்தில் நிற்பவர்களையும் நிற்பவர்களையும் தன்னுடன் இணைத்து முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதை தனது பாணியாக வகுத்துக் கொண்டார் திரு.மு.கனகலிங்கம்.

வழமையான தடங்களை மீறி, தடங்கல்கலைத் தாண்டி நவீன யுக்திகளையும் பாதைகளையும் திறந்து, நிறைபணி செய்தார். அவை யாவும் தன் பணி எனத் தலைக்கனம் கொள்ளாது அனைத்தையும் இறைபணி எனப் பணிவு கொண்டார்.

மனவெழுச்சிப் பக்குவம் Emotional maturity உடையவர். மற்றவர்களுக்கு மதிப்பு கொடுப்பதென்பது அவர்களது கருத்துக்களை முழுமையக ஏற்றுக் கொளவது எனக் கொள்ள முடியாது.


நீங்கள் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தால் அன்றி நம்பிக்கையைப் பெற முடியாது என்பதற்கு உதாரணமாக நடந்து சிறப்பித்தவர்.

நீங்கள் செய்யும் ஒவ்வொருசிறு காரியமும் மற்றவர்களுக்கு ஒவ்வொரு செய்தியை அனுப்புகிறது என்பதை தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் மறக்கக் கூடாது. இதற்கு உதாரணமாக நடந்து சமூகத்தின் மதிப்பைப் பெற்றுக் கொண்டார்.

கல்வி உயர்தரங்களிள் அறிவார்ந்த பண்புகள் அனைவரிடம் நிறைந்துள்ளன.
அவர் சென்ற பாடசாலையிலும், இனியும் எதிர்காலத்தில் பெறப் போகிற பணிகளிலும் தன் திறமையைக் காட்டி தன்னை வளப்படுத்தி சமூகத்தையும் வளர்பாபர் என்பதில் எந்த ஐயமுமில்லை.
நன்றி."


இணைச் செயலாளரான திரு.பிரபாகரன் அவர்கள், பாராட்டுக் கவிதையை வாசித்து, அதிபர் திரு.மு.கனகலிங்கம் அவர்களுக்கு  ஒன்றியத்தின் சார்பாக நினைவுப் பரிசிலை வழங்கினார்.
0.0.0.0.0.0.0.0

Post Comment

Wednesday, February 15, 2012

வருடாந்த அறிக்கை 2012

யா/மேலைப் புலோலி சைவ பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியம்
வருடாந்த அறிக்கை 2012


முடிக்கொற்றாவற்றைப் பிள்ளையார் திருவருள் முன்னிற்க, மேலைப் புலோலி சைவ பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியத்தின் 2011 ஆம் வருடத்திற்கான ஆண்டறிக்iகையை சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

இணைச் செயலாளர் எஸ்.கே. சண்முகசுந்தரம்

முதற்கண் எங்கள் அழைப்பை ஏற்று, இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு அதிதியும், பாடசாலை முன்னாள் அதிபருமான திரு.மு.கனகலிங்கம் அவர்களுக்கும், இந் நிகழ்வைச் சிறப்பிக்க வந்துள்ள பழைய மாணவ, மாணவிகள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் ஒன்றியத்தின் சார்பில் வணக்கத்தைத் தெரிவிப்பதுடன், வருக வருகவென அகமகிழ்வுடன் வரவேற்கின்றோம்.

இத் தருணத்தில் கடந்த ஐந்து வருடங்களாக எமது வருடாந்தக் கூட்டங்கள் உட்பட நிருவாகக் கூட்டங்கள் என்பவற்றை சிறப்புற நடாத்துவதற்கு இக் கல்லூரியின் இடவசதியை மனமுவந்தளித்த, அளிக்கின்ற கல்லூரி முன்னாள், மற்றும் தற்போதைய அதிபர்களுக்கும் ஒன்றியத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதுடன், தொடர்ந்து அவர்களது ஆதரவையும் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம்.

மேலும் கடந்த காலங்களில் எமது நடவடிக்கைகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து, ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு ஆலோசனைகளையும் உரிய நேரத்தில் அளித்த எமது முன்னாள் போஷகர் அமரர் சி.பாலச்சந்திரன் அவர்களையும் இத் தருணத்தில் நினைவுகூருகிறோம்.
அமரர் சிற்றம்பலம் பாலச்சந்திரன்
பாடசாலையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்கு அங்கத்தவர்களாகிய உங்களது ஆர்வம், ஒத்துழைப்பு, முக்கியமாக பொருளுதவி. ஆலோசனைகள் மிக மிக முக்கியமானவை. கடந்த வருடங்களைப் போலவே இப் பங்களிப்புகளை தொடர்ந்தும் சிறப்பாக வழங்குவீர்களென்ற திடமான நம்பிக்கை எமக்குண்டு.

சமர்ப்பிக்கப்படும் இந்த ஐந்தாவது வருடாந்த அறிக்கையானது ஒன்றியத்தின் 2011ஆம் ஆண்டின் முழுக் காலப் பகுதிக்குமான செயற்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.

இவ் வருடத்திய செயற்குழுவானது போஷகர் அமரர் சி. பாலச்சந்திரன், தலைவர் டொக்டர் எம்.கே. இரகுநாதன், சிரேஷ்ட உப தலைவர் டொக்டர் எம்.கே. முருகானந்தன், மற்றும் இணைச் செயலாளர்கள் இருவர், பொருளாளர், உப பொருளாளர், கணக்காய்வாளர் உட்பட செயற்குழு அங்கத்தவர்கள் 12 பேரையும், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் 12 பேரையும் கொண்டு பெரிய அளவிலான உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது. இது எமது செயற்பாடுகளைத் தரமாகவும், திருப்திகரமானதாகவும், விரைவாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு உதவியாக அமைந்திருந்தது. அநேகர் துறைசார் நிபுணர்களாகவும், தொழில்துறை முன்னோடிகளாகவும் இருப்பதனால் அவர்களது சேவைகளைப் பெறுவதில் நேரப் பற்றாக்குறை இருந்தபோதும், இவற்றையும் எதிர்கொண்டு, முடிந்தளவில் பொறுப்புக்களைப் பூர்த்திசெய்த திருப்தி எமது அங்கத்தவர்களுக்கு உண்டு.

இக் காலப்பகுதியில் வருடாந்தக் கூட்டம் உட்பட  மொத்தமாக செயற்குழு கூட்டங்கள் ஐந்து நடாத்தப்பட்டுள்ளன. கூட்டங்களுக்கு சராசரியாக 12 அங்கத்தவர்கள் சமூகமளித்துள்ளனர்.  


எமது போஷகரின் மறைவு எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துவிட்டபோதிலும், அவர் ஆற்றிய சேவைகளை அன்னாரது பாரியாரும், சைவ மங்கையர் கழக முன்னாள் அதிபருமான திருமதி ஞானேஸ்வரி பாலச்சந்திரன் தொடர்ந்து வழங்க முன்வந்தமை எங்களுக்கு ஆறுதலையையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. அவருக்கும் ஒன்றியத்தின் சார்பில் நன்றிகள் உரித்தாகுக.

இக் காலகட்டத்தில் எமது செயற்பாடுகளை நோக்குமிடத்து, சென்ற ஆண்டறிக்கையில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களான புதிய கட்டடம் அமைத்தல், மண்டபத்திற்கு மாபிள் இடும் பணி, கணனிமுறை விரிவாக்கம், 5ஆம் தர புலமைப்பரிசின் நிதியுதவி, அதிபர் இடமாற்றம், நிழற்பிரதிமை இயந்திரம் வழங்கல், மருத்துவ முகாம் நடாத்துதல், சரஸ்வதி சிலைகள் அமைத்தல், சிறிய வளாகத்திற்கு மின்சார வசதி வழங்கல், கணனி மற்றும் உபகரணங்களின் பாதுகாப்புக்காக அறைக்கு இரும்புக் கதவு அமைத்தல் என்பன கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.


புதிய கட்டடம் அமைத்தல்: ஒன்றியத்தின் முயற்சியின் பலனாக பழைய மாணவரும், வடமாகாண சபைக் கணக்காளருமான திரு. சிவபாதம் அவர்களினது அயராத முயற்சியாலும், மற்றும் பாடசாலை பழைய மாணவ சங்கச் செயலாளர் திரு. செல்வராஜா அவர்களினது உதவியின் பலனாகவும் அரச நிதியினைப் பயன்படுத்தி மூன்று அறைகள் கொண்ட கட்டடம் குறித்த காலப் பகுதிக்குள் பூர்த்தியாகியுள்ளது. இக் கட்டடத்தின் மின்சார இணைப்புக்கு மேலும் சுமார் ரூபா 150,000/= தேவைப்படுகின்றது. இதற்காக ஏற்கெனவே திரு.நி. சிவரூபன் அவர்கள் பங்களிப்புச் செய்துள்ளார். திரு. மு. சிவநேசன் அவர்களும் திரு.வை.ஜெயக்குமார் அவர்களும் பங்களிப்புச் செய்ய இருக்கிறார்கள். திறப்பு விழாவை எதிர்நோக்கியிருக்கும் இக் கட்டடத்திற்கு விரைவில் ஒளியூட்டவேண்டியது எமது கடமையும்கூட. உங்கள் பங்களிப்புடன் இப் பணியை நிறைவு செய்ய முடியும் என்பது திண்ணம்.

2011 ஆண்டு புலமைப் பரிசிலுக்கான நிதி வழங்கல்: 2010 ஆம் ஆண்டு பரீட்சை முடிவுகளின்படி இப் பரீட்சைக்குத் தோற்றிய 56 மாணவர்களில் 13 பேர் சிறப்புச் சித்தி அடைந்துள்ளனர். மேலும் 16 பேர் 100க்கும் மேற்பட்ட புள்ளிகளையும், மேலும் 15 பேர் சித்தி மட்டமான 70க்கு மேற்பட்ட புள்ளிகளையும் பெற்றுள்ளனர். ஒன்றியத்தின் சார்பில் சிறப்பு சித்தி பெற்றவர்களுக்கு அன்பளிப்பாக அங்கத்தவர்களிடையே சேர்த்த ரூபா 24,000/= பரிசளிப்பு விழா  அன்று வழங்கப்பட்டது. இதனைவிட வழமைபோல புலமைப் பரிசில் நிதியத்திலிருந்தும் பங்களிப்புகள் முதல் மூன்று இடங்களுக்கும் வழங்கப்;பட்டன. இத் தருணத்தில் மாணவர்கள் திறமையாகச் சித்தியடைய முழுமையாகப் பங்களிப்பாற்றிய ஆசிரிய பெருந்தகைகளுக்கு ஒன்றியத்தின் நன்றிகள் உரித்தாகுக.

நிழற்பிரதிமை இயந்திரம் வழங்கல்: புதிய அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கஇ முன்னாள் அதிபரின் பிரிவுபசார விழாவிலன்று ஒன்றியத்தின் சார்பில் பங்குபற்றிய சிரேஷ்ட உப தலைவர் டொக்டர் எம். கே. முருகானந்தன் அவர்களால் வைபவ ரீதியாக இவ்வியந்திரம் புதிய அதிபரிடம் கையளிக்கப்பட்டது. இந்த இயந்திரத்தைக் கொள்வனவு செய்வதற்கு  டென்மார்க்கில் வதியும் திரு.இரத்தினசபாபதி கிருஷ்ணராசா அவர்கள் முக்கிய பங்களிப்பாக ரூபா 98,651/= வழங்கியுள்ளார். இவ்வியந்திரத்தின் உடனடித் தேவையைக் கருத்தில்கொண்டு ரூபா 35,149/=- முற்பணமாக ஒன்றியத்தினால் வழங்கப்பட்டது. 

சரஸ்வதி சிலைகள் திறப்பு விழா: அமரர்கள் செ. பத்மநாதன், இராஜலஷ்;மி பத்மநாதன் ஆகியோரின் நினைவாக அவர்களது குடும்பத்தினரின் நிதி உதவியுடன் பெரிய வளாகத்திலும், அமரர் வை. கா. சிவப்பிரகாசம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரின் மகனான வை.கா.சி.முகுந்தன் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் சிறிய வளாகத்திலும் சரஸ்வதி சிலைகள் அமைக்கப்பட்டன. இச் சரஸ்வதி சிலைகள் திரு, தம்பிராசா, திருமதி மீனலோசனி தம்பிராசா அவர்களாலும், திரு.வை.கா. இராமச்சந்திரன் அவர்களாலும் 19.06.2011 அன்று முறையே திறந்துவைக்கப்பட்டன.


மெல்ல கற்போருக்கான விசேட வகுப்புகள்:
ஒன்றியத்தின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டம் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்காக ஓர் ஆசிரியரினால் விசேட வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. இதற்காக வருடாவருடம் ரூபா 40,000/= அன்பளிப்புச் செய்யும் திரு. தி.செல்வமோகன் மற்றும் திரு.சி.வசந்தன் ஆகியோரின் பங்களிப்புகள் மெச்சத்தக்கவை.


மருத்துவ பரிசோதனை முகாம்: டொக்டர் எம்.கே. இரகுநாதன் அவர்களின் தளராத முயற்சியால் 11.12.2011 அன்று முழு நாள் நிகழ்வாக மருத்துவ பரிசோதனை முகாமானது பெரிய வளாகத்தில் நடாத்தப்பட்டது. இதனால் முக்கியமாக பாடசாலை மாணவர்களும் மற்றும்  பாடசாலை சமூகத்தினரும் உட்பட சுமார் 450 பேர்வரை பயனடைந்துள்ளனர். மருத்துவ குழாமில் யாழ் அரசினர் வைத்தியசாலையைச் சேர்ந்த குழந்தை மருத்துவம் சார்ந்த சிரேஷ்ட மருத்துவர்களான டொக்டர்கள் இரவீந்திரன், யக்கோப்ஸன் மற்றும் டொக்டர் வசந்தநாதன் தவநாதன் ஆகியோரும், பற்சிகிச்சை நிபுணர் டொக்டர் சி. மகாலிங்கமும்; பங்கேற்றனர். மேற்சிகிச்சைகளுக்கான அறிவுறுத்தல்களும் இங்கு வழங்கப்பட்டன. பாடசாலை வரலாற்றில் முக்கிய பொது நிகழ்வாகக் கருதப்பட்ட இந் நிகழ்வை மேலும் விரிவுபடுத்தி வருடாவருடம் நடத்துவதென டொக்டர் எம்.கே. இரகுநாதன் அவர்கள் உறுதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது இந் நிகழ்வுக்கு பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினர் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

மைதானத்தில் அமைந்துள்ள கலையரங்கிற்கு சிறு திருத்தவேலைகளும், வர்ணம் பூசுதலும்: நடப்பு ஆண்டு விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக மேற்கொள்ளவிருந்த வேலைகளுக்கு ரூபா 30,000/=- மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இத் தொகையானது கலையரங்கை அமைத்த அமரர்களாகிய வே.க. கந்தையா மற்றும் சு.பெ.மு. கனகசபாபதி ஆகியோரின் குடும்பத்தினர் சார்பாக எஸ்.கே.கொம்பனி, டொக்டர் எம்.கே. முருகானந்தன் மற்றும் டொக்டர் எம்.கே. இரகுநாதன் ஆகியோரால் வழங்கப்பட்டது.

அதிபருக்கு பிரியாவிடை:  கடந்த 5 வருடங்களாக அதிபராகக் கடமையாற்றி எமது பாடசாலையின் வளர்ச்சிக்காக முழுமூச்சுடன் உழைத்தவர் அதிபர் மு. கனகலிங்கம் ஆவார். அண்மைக் காலச் சரித்திரத்தில் எமது பாடசாலை அளப்பரிய வளர்ச்சியை அடைவதற்கான தலைமைத்துவத்தை வழங்கினார். பரீட்சைப் பெறுபேறுகளிலும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை பெருக்குவதிலும் பெருவெற்றி ஈட்டி பாடசாலை சமூகத்தின் அன்புக்குப் பாத்திரமானார்.

20.06.2011 இல் இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிபர் மு. கனகலிங்கம் அவர்களுக்கு புதிய அதிபரின் தலைமையில் அளித்த பிரியாவிடை வைபவத்தின்போது ஒன்றியத்தின் சார்பில் சிரேஷ்ட உப தலைவர் டொக்டர் எம்,கே. முருகானந்தன் அவர்கள் கலந்துகொண்டார். ஒன்றியத்தின் சார்பாக நினைவுப் பரிசில் ஒன்றை வழங்கியதுடன், அவரின் சேவைகளை நினைவுபடுத்திப் பாராட்டிப் பேசியதுடன், புதிய அதிபரை வரவேற்றும் சிறப்புரை வழங்கினார்.

எமது பாடசாலையில் ஆற்றிய மிக உயர் சேவைக்காக திரு. மு.கனகலிங்கம் அவர்களுக்கு ஆசிரியர் பிரதீப பிரபா 2011 விருது வழங்கப்பட்டது. அவருக்கு ஒன்றியத்தின் மனமுவந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக.

புதிய அதிபர் வரவு: புதிய அதிபராகக் கடமையேற்ற திரு.பொ.பொன்னம்பலம் அவர்களும் வற்றாத கடமையுணர்வும் அர்ப்பணிப்பும் கொண்டவராவார். பாடசாலையின் அடிப்படை வசதிகளை வளர்க்கும் அதே நேரம், கல்வி முன்னேற்றத்திலும் அக்கறையோடு செயற்படுகிறார். எமது பழைய மாணவர் ஒன்றியம் மற்றும் பாடசாலை சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்று, பாடசாலையை முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து வழி நடாத்துகிறார். அவருக்கும் எமது மானமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக.


பரிசளிப்பு விழா 20.11.2011: ஒன்றியத்தின் சார்பில் பிரதம விருந்தினராக எமது ஒன்றியத்தின் முன்னாள் செயலாளரும், யாழ். வலய பிரதிக் கல்விப் பணிப்பாளருமான திரு.சு. சற்குணராஜா அவர்கள் கலந்துகொண்டு, விழாவைச் சிறப்பித்தார். அவருடைய பாரியார் திருமதி செல்வரஞ்சிதம் சற்குணராசா பரிசில்களை வழங்கினார். 


பரிசில் வழங்குவதற்கான நூல்களுக்காக அமரர் வே.க. கந்தையா அவர்கள் நினைவாக திருவாளர்கள் க. இராமச்சந்திரன், க. சிறீஸ்கந்தராஜன் ஆகியோர் ரூபா 5,000/= அன்பளிப்புச் செய்திருந்தனர்.

சிறிய வளாகத்திற்கு சுற்று மதில் அமைத்தல்: முன்னாள் தலைமை ஆசிரியை அமரர் பாக்கியம் முருகேசு அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினர்  சார்பில் அவரது மகளான திருமதி ஜெயதர்சினி இராஜலிங்கம் அவர்கள் ஏற்கெனவே ரூபா 200,000/= அனுப்பி வைத்துள்ளார்.

அமரர் பாக்கியம் முருகேசு

ஆங்கிலம் கற்பித்தலுக்கான ஆசிரியர் பற்றாக்குறை: இவ் விடயத்தை அதிபர் ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தார். ஒன்றியம் இவ்விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தவேண்டியுள்ளது. பாடசாலை வளங்களை அபிவிருத்தி செய்வது மட்டுமல்லாது, மாணவர்களின் கல்வி மட்டத்தை மேம்படுத்தல், ஆசிரியர்களின் நலன்புரி வசதிகள், கற்பித்தலுக்கான உபகரண வசதிகளை மேம்படுத்தல் போன்ற அம்சங்களிலும் மேற்கொண்டு ஒன்றியத்தின் நடவடிக்கைகள் விஸ்தரிக்கவேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. இவ் விடயத்தில் பழைய மாணவர்களின் கற்பித்தல் துறைசார் அங்கத்தவர்களின் ஆலோசனைகளையும், ஆக்கபூர்வமான உதவிகளையும் ஒன்றியம் வேண்டி நிற்கிறது.

பெண்களுக்கான கழிப்பறை:  பாடசாலை பெரிய வளாகத்தில் பெண் மாணவியருக்கான தனியான கழிப்பறை அமைப்பதற்கான திட்டமிடப்பட்டபோது திரு.கந்தையா மனோகரன் உடனடியாக ரூபா ஒரு இலட்சம் வழங்கியுள்ளார். தேவை ஏற்படின் மேலும் உதவி செய்யவும் இணங்கியுள்ளமை குறிப்படத்தக்கது.

ஏனையவை : இது தவிர குறித்த நிதியாண்டில் பாடசாலை அபிவிருத்திக்கென பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் அமரர் ரீ.என் சண்முகலிங்கம் நினைவாக அவரின் பாரியார் திருமதி பத்மஜோதி சண்முகலிங்கம் அவர்கள் ரூபா 75.000/= நிதியுதவி அளித்துள்ளார். இந் நிதியை ஒரு பொருத்தமான திட்டத்திற்குப் பயன்படுத்த ஒன்றியம் எண்ணியுள்ளது. நிழற்பிரதிமை இயந்திரத்திற்கு முற்பணமாகப் பயன்படுத்தப்பட்ட ரூபா 25,000/= இதில் அடங்கும்.

மேலும் பாடசாலை அபிவிருத்திப் பணிக்கென முன்னாள் ஆசிரியை திருமதி மாணிக்கம் வைத்திலிங்கம் அவர்களும் ரூபா 10,000/= அன்பளிப்புச் செய்துள்ளார். சென்ற வருடங்களிலும் இவர் பாடசாலை வளர்ச்சிக்கு உதவியமை குறிப்பிடத்தக்கது.

சிறிய வாளகத்திற்கு விளையாட்டு மைதானம் ஒன்றின் தேவை உணரப்பட்டமையால், பாடசாலையின் கிழக்குப் பக்கத்தில் மேலும் இட வசதிகள் தொடர்பாக வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருவதுடன், உரிமையாளர்களை இனங்கண்டு, குறைந்தபட்சம் பாவனைக்குப் பெறுவதற்கான வழிவகைகளைப் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நடப்பாண்டிலும் இவ் விடயம் தொடரப்படவேண்டியதாகவுள்ளது.
நடப்பாண்டில் எம்முடன் இணைந்து செயற்பட்ட தலைவர் உட்பட செயற்குழு அங்கத்தவர்கள் அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தெரிவுசெய்யப்படவுள்ள புதிய நிர்வாகக் குழுவானது இவ்வம்சங்களையும் கருத்தில் கொண்டு, சிறப்புடன் சேவையாற்ற எமது வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவிப்பதுடன், உங்கள் பரிபூரண ஒத்துழைப்பையும் வழங்கும்படி கோரி. இவ்வறிக்கையை நிறைவுசெய்கிறோம். 

நன்றி.



எம்.கே. இரகுநாதன்                                                 க. பிரபாகரன்
   தலைவர்                                                     எஸ்.கே. சண்முகசுந்தரம்
                                                                           இணைச் செயலாளர்கள்                

Post Comment